எல்எல்சி 2022: வாட்சன், பதான் சகோதரர்கள் அபாரம்; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பில்வாரா கிங்ஸ்!
லெஜண்ட்ஸ் லீக் தொடரில் இரண்டாவது குவாலிஃபையர் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் ஜெய்ண்ட்ஸ், பில்வாரா கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர் திலகரத்னே தில்சன் 36 ரன்களைச் சேர்த்து ஓரளவுக்கு சிறப்பாக விளையாடிய நிலையில், கிறிஸ் கெய்ல் 5 ரன்களை மட்டும் சேர்த்து ரன் அவுட் ஆனார்.
அடுத்து வந்த யாஷ்பால் சிங் 43, கெவின் ஓ பிரையன் 45 ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தார்கள். இறுதியில் மெண்டிஸ் 24 (10) அதிரடி காட்டியதால், குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை சேர்த்தது. பில்வாரா அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீசாந்த் இரண்டு விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய பில்வாரா கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் அயர்லாந்து வீரர் போடர்பில்ட் 60, தென் ஆப்பிரிக்க வீரர் வன் யாங்க் 31 இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தார்கள். அடுத்து ஷேன் வாட்சன் 24 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 48 ரன்களை குவித்து அசத்தினார்.
இறுதியில் யூசுப் பதான் 21 , இர்பான் பதான் 22 இருவரும் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை முடித்துக் கொடுத்தனர். இதன்மூலம் பில்வாரா கிங்ஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் பில்வாரா கிங்ஸ் அணி லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது குறிப்பிடத்தக்கது.