நமான் ஓஜா அபார சதம்; பட்டத்தை வென்றது இந்தியா லெஜண்ட்ஸ்!

Updated: Sun, Oct 02 2022 07:56 IST
Image Source: Google

உலக சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று ராய்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் - இலங்கை லெஜண்ட்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னாவும் 4 ரன்களோடு குலசேகராவின் பந்துவீச்சிலேயா விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் மறுமுனயில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நமன் ஓஜா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய வினய் குமார் 36 ரன்களையும், யுவராஜ் சிங் 19 ரன்களையும் சேர்த்தனர். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களைச் சேர்த்தது. இந்தியா லெஜண்ட்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக நமன் ஓஜா 108 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து இலக்கை துரத்திய இலங்கை லெஜண்ட்ஸ் அணியில் முனவீரா, சனத் ஜெயசூர்யா, தில்சான், உபுல் தரங்கா, குணரத்னே, ஜேவன் மெண்டிஸ் என அடுத்தடுத்து நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

பின்னர் களமிறங்கிய இஷான் ஜெயரத்னே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைப் பதிவுசெய்தார். இருப்பினும் 18.2 ஓவர்களில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதன்மூலம் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை