எல்எல்சி 2023: இந்தியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி குவாலிஃபையருக்கு முன்னேறியது மணிப்பால் டைகர்ஸ்!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் மணிப்பால் டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மணிப்பால் டைகர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு ரோவ்மன் பாவெல் - கேப்டன் கௌதம் கம்பீர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பாவெல் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து கௌதம் கம்பீர் 17 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய பரத் சிப்லி அதிரடியாக விளையாட, மறுபக்கம் களமிறங்கிய எட்வர்ட்ஸ், பீட்டர்சென் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய பென் டங் அதிரடியாக விளையாடி 33 ரன்களையும், நர்ஸ் 26 ரன்களையும் சேர்க்க இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பரத் சிப்லி அரைசதம் கடந்து 65 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களைச் சேர்த்தது. மணிப்பால் அணியில் பங்கச் சிங், பிரவீன் குப்தா, இம்ரான் கான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மணிப்பால் டைகர்ஸ் அணியில் கைல் கோட்ஸர் 10 ரன்களுக்கும், சாத்விக் வால்டன் 23 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து இணைந்த காலின் டி கிராண்ட்ஹோம் - அமித் வர்மா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய கிராண்ட்ஹோம் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் கிராண்ட்ஹோம் 58 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அமித் வர்மா 48 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய ஏஞ்சலோ பெரேரா ரன்கள் ஏதுமின்றியும், முகமது கைஃப் 2 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் களமிறங்கிய திசாரா பெரேரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன் 31 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் மணிப்பால் டைகர்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் மணிப்பால் டைகர்ஸ் அணி முதல் அணியாக குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.