எல்பிஎல் 2023: ரஜிதா, செய்ஃபெர்ட் அசத்தல்; ஜாஃப்னாவை வீழ்த்திய கலே!
இலங்கையில் நடைபெற்றுவரும் 4ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் - கலே டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜாஃப்னா அணிவீரர்கள் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதில் நிஷன் மதுஷங்கா 2, ரஹ்மனுல்லா குர்பாஸ் 0, கிறிஸ் லின் 4, சோயிப் மாலிக் 0, டேவிட் மில்லர் 5, கருணரத்னே 7 என அதிரடி வீரர்கள் அனைவரும் ஒற்றையிலக்க ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக துனித வல்லலகே 22 ரன்களையும், திஷாரா பெரேரா, மஹீஷ் தீக்ஷனா தலா 13 ரன்களையும் சேர்த்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கலே அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கசுன் ரஜிதா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கலே அணியில் பனுகா ராஜபக்ச்ஜா 15 ரன்களுக்கும், சாத் பௌஸ் 13 ரன்களுக்கு என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான டிம் செய்ஃபெர்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றியை எளிதாக்கினார்.
இதன்மூலம் கலே டைட்டன்ஸ் அணி 13.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கசுன் ரஜிதா ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.