இலங்கையில் நடைபெற்றுவரும் 4ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் - பி லௌவ் கண்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கண்டி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு முகமது ஹாரிஸ் - ஃபகர் ஸமான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தினேஷ் சண்டிமல், சஹன், ஏஞ்சலோ மேத்யூஸ், வநிந்து ஹசரங்கா, ஆசிஃப் அலி என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த முகமது ஹாரிஸ் 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 81 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கண்டி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைச் சேர்த்தது. ஜாஃப்னா அணி தரப்பில் நுவான் துஷாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜாஃப்னா அணிக்கு நிஷன் மதுஷங்கா - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குர்பாஸ் ஒரு ரன்னிலும், மதுஷங்கா 8 ரன்களுக்கும், சரித் அசலங்கா 2 ரன்களுக்கும், கிறிஸ் லின் 27 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

அதன்பின் இணைந்த சோயிப் மாலிக் - டேவிட் மில்லர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சோயிப் மாலிக் அரைசதம் கடந்தார். அதேசமயம் மறுபக்கம் டேவிட் மில்லர் 24 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய திசாரா பெரேரா 36 ரன்களையும் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். 

இருப்பினும் இறுதிவரை போராடிய சோயிப் மாலிக் 55 ரன்களை எடுத்த நிலையிலும் ஜாஃப்னா அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெடுகளை இழந்து 170 ரன்களை மட்டுமே எடுத்தது. கண்டி அணி தரப்பில் மேத்யூஸ் 3 விக்கெட்டுகளையும், நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

இதன்மூலம் பி லௌவ் கண்டி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அரைசதமடித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த முகமது ஹாரிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News