எல்பிஎல் 2023: கலேவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தம்புலா!

Updated: Thu, Aug 17 2023 20:53 IST
Image Source: Google

இலங்கையில் நடைபெற்றுவரும் 4ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் லீக் போட்டியில் கலே டைட்டன்ஸ் - தம்புலா ஆரா அணிகள் பலபப்ரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தம்புலா அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய கலே டைட்டன்ஸ் அணியில் பனுகா ராஜபக்‌ஷா ரன்கள் ஏதுமின்றியும், லிட்டன் தாஸ் 8 ரன்களுக்கும், ஷாகிப் அல் ஹசன் 19 ரன்களுக்கும், கேப்டன் ஷனகா 12 ரன்களிலும், நஜிபுல்லா ஸத்ரான் 2 ரன்களிலும், லஹிரு சமரக்கூன் 15 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

இருப்பினும் மறுபக்கம் மற்றொரு தொடக்க வீரரான லசித் க்ரூஸ்புலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 80 ரன்களைச் சேர்த்திருந்த க்ரூஸ்புலேவும் விக்கெட்டை இழக்க, 20 ஓவர்களில் கலே டைட்டன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தம்புலா தரப்பில் ஹெய்டன் கெர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தம்புலா அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் ஃபெர்னாண்டோ 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த சதீரா சமரவிக்ரமா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதனையடுத்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குசால் மெண்டிஸ் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய குசால் பெரேரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 53 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

இதன்மூலம் தம்புலா ஆரா அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் கலே டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் தம்புலா ஆரா அணி நடப்பாண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த குசால் பெரேரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை