எல்பிஎல் 2023: கண்டி அணிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தம்புலா!
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லிக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 19ஆவது லீக் ஆட்டத்தில் பி லௌவ் கண்டி மற்றும் தம்புலா ஆரா அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன, இப்போட்டியில் டாஸ் வென்ற பி லௌவ் கண்டி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தம்புலா அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ - சதீரா சமரவிக்ரமா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் சமரவிக்ரமா 31 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய லசித் 6 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவிஷ்கா ஃபெர்னாண்டோவும் 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய பென் மெக்டர்மோட் தனது பங்கிற்கு 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 37 ரன்களையும், தனஞ்செயா டி சில்வா 10 ரன்களையும், ஹெய்டன் கெர் 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையா ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தம்புலா ஆரா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது. கண்டி அணி தரப்பில் நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், டி சில்வா, வநிந்து ஹசரங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.