எல்பிஎல் 2023: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் பந்தாடி தம்புலா ஆரா அணி அபார வெற்றி!
லங்கா பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் தம்புலா ஆரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தம்புலா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய அந்த அணியில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா, தனஞ்செய டி சில்வா என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பென் மெக்டர்மோட் - அலெக்ஸ் ரோஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பென் மெக்டர்மோட் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 69 ரன்களைக் குவித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தம்புலா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. இதில் பதும் நிஷங்கா 12, பாபர் ஆசாம் 11, நிரோஷன் டிக்வெல்லா 17, நுவனிந்து ஃபெர்னாண்டோ 21, ஏஞ்சலோ பெரேரா ஒரு ரன்னுடனும், இஃப்திகார் அஹ்மத் 18 ரன்களுடனும், முகமது நவாஸ் 20 ரன்களுடனும் என சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழக்க, 19.4 ஓவர்களில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தம்புலா அணி தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும், பினுரா ஃபெர்னாண்டோ, நூர் அஹ்மத், துஷன் ஹெமந்தா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் தம்புலா அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் கொழும்பு அணியை வீழ்த்தியது.