எல்பிஎல் 2023: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய ஹசரங்கா; கண்டி அணி அபார வெற்றி!
இலங்கையில் நடைபெற்றுவரும் 4ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் பி லௌவ் கண்டி - கலே டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கலே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கண்டி அணியில் முகமது ஹாரிஸ் 14 ரன்களிலும், தினேஷ் சண்டிமல் 25 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த ஃபகர் ஸமான் - ஏஞ்சலோ மேத்யூஸ் இணை சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஃபகர் 45 ரன்களுக்கும், மேத்யூஸ் 40 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தான்ர்.
அதன்பின் களமிறங்கிய வநிந்து ஹசரங்கா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், 27 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 64 ரன்களை விளாசினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கண்டி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களைச் சேர்த்தது. கலே அணி தரப்பில் லஹிரு சமரகூன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கலே அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஷெவோன் டேனியால், பனுகா ராஜபக்ஷா, டிம் செய்ஃபெர்ட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த லசித் க்ரூஸ்புலேவும் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் இணைந்த அஷன் பிரியஞ்சன் - லஹிரு சமரகூன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ரன்களைச் சேர்த்தனர். பின் பிரியஞ்சன் 25 ரன்களிலும், சமரகூன் 36 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் 16.4 ஓவர்களிலே கலே டைட்டன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கண்டி அணி தரப்பில் கேப்டன் வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும், நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் பி லௌவ் கண்டி அணி 89 ரன்கள் வித்தியாசத்தியாசத்தில் கலே டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கிய கண்டி அணியின் கேப்டன் வநிந்து ஹசரங்கா ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.