எல்பிஎல் 2021: தகுதி சுற்றுக்குள் நுழைந்தது தம்புலா ஜெயண்ட்ஸ்!
லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று போட்டியில் தம்புலா ஜெயண்ட்ஸ் - கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த கொழும்பு ஸ்டார்ஸ் அணி நிஷங்கா, மேத்யூஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக மேத்யூஸ் 50 ரன்களையும், நிஷங்கா 42 ரன்களையும் சேர்த்தனர். தம்புலா அணி தரப்பில் இம்ரான் தாஹிர், நுவான் பிரதீப் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய தம்புலா அணியில் டிக்வெல்லா முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த பிலிப் சால்ட் - ஜனித் லியாங்கே இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.
இதில் லியாங்கே அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் தம்புலா ஜெயண்ட்ஸ் அணி 18.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. இதில் லியாங்கே 56 ரன்களைச் சேர்த்தார்.
இந்த வெற்றியின் மூலம் தம்புலா ஜெயண்ட்ஸ் அணி லங்கா பிரீமியர் லீக் தொடரின் தகுதிச்சுற்று போட்டிக்கு முன்னேறியது. தகுதிச்சுற்று போட்டியிலும் வெற்றிபெறும் பட்சத்தில் அந்த அணி இறுதிப் போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.