ஐபிஎல் 2022: விபத்தில் சிக்கிய லக்னோ அணி அதிகாரிகள்!
ஐபிஎல் தொடரின் 42ஆவது லீக் போட்டியில் இன்று லக்னோ மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. ஏற்கனவே 5 வெற்றிகளை பெற்ற நம்பிக்கையுடன் லக்னோ அணி இன்றைய போட்டியிலும் களமிறங்கியது.
இந்நிலையில் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி இலக்கை துரத்தி வருகிறது.
இதற்கிடையில் இப்போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அணி நிர்வாகத்திற்கு அதிர்ச்சி செய்தி கிடைத்தது. அதாவது புனே நகரத்தில் இருந்து தான் லக்னோ அணி மும்பைக்கு வந்திருந்தது. வீரர்கள் வந்த போதும் நிர்வாகிகள் கடைசி நேரத்தில் தான் வருகை தந்தனர். வரும் வழியில் அவர்கள் சாலை விபத்தில் சிக்கியுள்ளனர்.
லக்னோ அணியின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஐயர், அவரின் உதவியாளர் ரச்சித்தா பெர்ரி ஆகியோர் இருந்தனர். இவர்களுடன் சேர்ந்து கவுதம் கம்பீரின் மேளாலர் கௌரவ் அரோராவும் உடன் இருந்துள்ளார். அவர்கள் மூவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அணி ஆலோசகர் கம்பீரும் இந்த காரில் தான் வந்திருக்க வேண்டியது என தெரிகிறது. வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக இந்த முறை அணி பேருந்திலேயே வந்துவிட்டதால், அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தப்பியதாக தெரிகிறது.
இதுகுறித்து லக்னோ அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், 3 அதிகாரிகள் கார் விபத்தில் சிக்கியதாகவும், அவர்களுக்கு பெரிய அளவில் காயம் இல்லை என்பதால் விரைவில் குணமடைவார்கள் எனத்தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, அணி வீரர்கள் இந்த செய்தி அறிந்து பதற்றமடையாமல் இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.