நல்வாய்ப்பாக தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்துவிட்டார் - சல்மான் பட் புகழாரம்!

Updated: Mon, Aug 01 2022 16:05 IST
Image Source: Google

தற்போது 37 வயதான தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணியில் அண்மையில் கம்பேக் கொடுத்தார். டி20 கிரிக்கெட்டுக்கான அணியில் அவர் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக உருவாகி உள்ளார். அவரது ரோல் ஆட்டத்தை முடித்து கொடுக்கும் ஃபினிஷர் பணி என்பது தெளிவாக உள்ளது. 

அதற்கு ஏற்ற வகையில் அவரும் சிறப்பாக விளையாடி வருகிறார். அதிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 19 பந்துகளில் 41 ரன்களை சேர்த்து அசத்தினார். மேலும் அப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

அவரது கம்பேக் குறித்து கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் தொடங்கி முன்னாள் வீரர்கள் வரை அனைவரும் புகழ்ந்துள்ளனர். அதில் தற்போது முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் பட்டும் இணைந்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சல்மான் பட், “நல்வாய்ப்பாக தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்துவிட்டார். அவர் மட்டும் பாகிஸ்தானில் பிறந்திருந்தால் அவரது வயதுக்கு இங்கு உள்நாட்டு கிரிக்கெட் கூட விளையாடி இருக்க முடியாது.

இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால பெஞ்ச் ஸ்ட்ரென்த் செம ஸ்டிராங்காக உள்ளது. அது அப்பட்டமாக தெரிகிறது. தரமான அணியை இந்தியர்கள் கட்டமைத்து உள்ளார்கள். சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், அர்ஷ்தீப் சிங், சுப்மன் கில் என திறமையான இளம் வீரர்கள் நிறைய பேர் இந்திய அணியில் நிறைந்துள்ளனர். பாகிஸ்தான் அணியை பாருங்கள் ஷாஹீன் அஃப்ரிடியை பெரிதும் நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது” என தெரிவித்துள்ளார் பட்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் 27 தொடங்கி செப்டம்பர் 11 வரை அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடரில் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இந்நிலையில், சல்மான் பட்டின் இந்தப் பாராட்டு கவனம் பெறுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை