தோனியின் கேப்டன்சியை புகழந்த லுங்கி இங்கிடி!
இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் ஆவார். கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் 2007இல் தம்மிடம் வழங்கப்பட்ட பொறுப்பில் அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழிநடத்தி டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த அவர் 2011இல் சொந்த மண்ணில் 28 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார்.
அதேபோல் 2013இல் தாம் வளர்த்த விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற இளம் வீரர்களை வைத்து இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை வென்று காட்டிய அவர் அதிரடியான பேட்ஸ்மேன், சிறப்பான விக்கெட் கீப்பர் உட்பட பல பரிணாமங்களை கொண்டவர்.
ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக 4 கோப்பைகளை வென்று போட்டிகளின் அடிப்படையில் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாக போற்றப்படுகிறார். அவரது தலைமையில் வாய்ப்பு பெற்று விளையாடிய நிறைய இளம் வீரர்கள் நாளடைவில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உருவெடுத்துள்ளார்கள். சொல்லப்போனால் இன்றைய இந்திய அணியில் விளையாடும் பாதிக்கும் மேற்பட்ட வீரர்கள் அவரது வாய்ப்பு மற்றும் ஆதரவால் நட்சத்திரங்களாக வளர்ந்தவர்கள் என்றே கூறலாம்.
அதன் காரணமாகவே அவரது தலைமையில் விளையாடுவதற்கு அனைத்து இளம் வீரர்களும் விரும்புகின்றனர். அதேபோல் ஐபிஎல் தொடரிலும் சென்னைக்காக 4 கோப்பைகளை வென்று போட்டிகளின் அடிப்படையில் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள அவரது தலைமையில் அவரது ஆலோசனைகளுடன் விளையாடிய பின்பு நிறைய விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். குறிப்பாக ட்வயன் ப்ராவோ, டு பிளேஸிஸ் போன்ற வெளிநாட்டு வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் தாங்கள் நல்ல வீரராக உருவெடுக்க தோனி முக்கிய பங்காற்றியுள்ளார் என்று அவர்களே நிறைய முறை கூறியுள்ளார்கள்.
அந்த வரிசையில் தோனியின் தலைமையில் சென்னை அணியில் விளையாடியது சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடுவதற்கு உத்வேகத்தை கொடுத்ததாக தென் ஆப்பிரிக்காவின் இளம் வீரர் லுங்கி நிகிடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “எனக்கு 22 வயதாக இருந்தபோது தோனியை போன்ற ஒரு மகத்தான அவர் என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்து தனது போட்டிகளை வென்றது என்னைப் பொறுத்தவரை மிகப் பெரியதாகும். அதேபோல் ஐபிஎல் தொடர் மிகப்பெரிய ரசிகர் கூட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பதையும் எனக்கு கற்றுக்கொடுத்தது. ஏனெனில் அதற்கு முன்பு எனது வாழ்நாளில் 60,000 ரசிகர்களுக்கு முன்னிலையில் ஒருபோதும் விளையாடியதில்லை. ஆரம்பத்தில் அது அழுத்தமாக இருந்தாலும் பழகப்பழக தென்றலாக மாறியது” என்று கூறினார்.
அதன்பின் ரிஷப் பந்த் தலைமையில் விளையாடியது பற்றி பேசிய அவர் “இந்த வருடம் டெல்லியில் ரிஷப் பண்ட் தலைமையில் விளையாடியது நல்ல அனுபவத்தைக் கொடுத்தது. அவர் இளமையாக இருந்தாலும் ஏற்கனவே போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளார். வலைப்பயிற்சியில் அவருக்கு எதிராக பந்துவீச வாய்ப்பு கிடைத்த எனக்கு அவர் நிறைய ஆலோசனைகளை உதவிகளை வழங்கினார்” என்று தெரிவித்தார்.