இனி வரும் போட்டிகளிலும் இந்த ஃபார்ம் தொடரும் - புஜாரா!
இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா, கடந்த 2 வருடங்களாக ஒரு சதத்தை கூட அடிக்காமல் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதிக பந்துகளை சந்தித்துவிட்டு, சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்கிறார் என பல முறை ரசிகர்கள் இவரை கடுமையாக சாடியுள்ளனர்.
இந்த விமர்சனங்களுக்கு நேற்றைய போட்டியில் புஜாரா பதிலடி கொடுத்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முன்னணி வீரர்களான கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் என அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் இந்திய அணி குறைந்த ஸ்கோருக்குள் சுருண்டுவிடும் என ரசிகர்கள் கவலையடைந்தனர். அப்போது அதிரடி காட்டி அசத்தினார்.
வழக்கமாக மட்டைப்போடும் புஜாரா, நேற்று திடீரென அதிரடி காட்டினார். 86 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரிகளுடன் 53 ரன்களை அடித்து அசத்தினார். அவருக்கு உறுதுணையாக நின்ற மற்றொரு சீனியர் வீரர் அஜிங்கியா ரஹானே 58 ரன்களை குவித்தார். இதனால் தான் இந்திய அணி 266 ரன்களை சேர்த்தது.
இந்நிலையில் தன் மீதான விமர்சனங்கள் குறித்து பேசிய புஜாரா, “இதில், எங்களின் பேட்டிங் ஃபார்ம் குறித்த விமர்சனங்கள், அழுத்தங்கள், வெளியில் இருக்கும் ரசிகர்கள் கொடுப்பது தான். அணிக்குள் எங்களுக்கு எந்தவித இடையூறும் இருந்ததில்லை. இந்திய அணி நிர்வாகம் எப்போதுமே அனைத்து வீரர்களுக்கும் உறுதுணையாக இருந்து வருகிறது. முக்கியமாக பயிற்சியாளர்கள், ஊழியர்கள் எங்களுடன் நிற்கின்றனர்.
நான் கடினமாக தான் உழைத்து வருகிறேன். சில நேரங்களில் ஒரு பேட்ஸ்மேனால் ரன் அடிக்க முடியாத சூழல் அமையலாம். ஆனால் அதற்காக வழக்கமாக செய்யும் விஷயங்களை விட்டுவிடக்கூடாது. தொடர்ந்து தங்களது விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். அதன் விளைவாக தான் இன்று எனக்கு ரன்கள் குவிந்தது. எனது இந்த ஃபார்ம் வரும் போட்டிகளிலும் தொடரும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு 240 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. எளிய இலக்கை நோக்கி விளையாடி வரும் அந்த அணி 118 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. இன்னும் 2 நாள் ஆட்டங்கள் முழுவதுமாக இருப்பதால் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.