எல்எல்சி 2023: அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மணிப்பால் டைகர்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து, ஹர்பஜன் சிங் தலைமையிலான மணிப்பால் டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மணிப்பால் டைகர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து.
அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் ரன்கள் ஏதுமின்றியும், டுவைன் ஸ்மித் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ரிக்கி கிளார் - குர்கீரட் சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
பின் குர்கீரட் சிங் 64 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிக்கி கிளார்க் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 80 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களைச் சேர்த்தது. மணிப்பால் அணி தரப்பில் பங்கஜ் சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மணிப்பால் டைகர்ஸ் அணிக்கு ராபின் உத்தப்பா - சாத்விக் வால்டன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் சாத்விக் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராபின் உத்தப்பா 40 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் இணைந்த ஏஞ்சலோ பெரேரா - கருணரத்னே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பெரேரா 30 ரன்களுக்கும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய திசாரா பெரேரா 25 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த கருணரத்னே அரைசதம் கடந்ததுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதன்மூலம் மணிப்பால் டைகர்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் அர்பன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு எல்எல்சி தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. மேலும் இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த கருணரத்னே ஆட்டநாயகனாகவும், திசாரா பெரேரா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.