SCO vs NZ, only ODI: மார்க் சாப்மேன் அசத்தல் சதம்; ஸ்காட்லாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து!

Updated: Mon, Aug 01 2022 11:55 IST
Image Source: Google

ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி இரண்டு டி20, ஒரு ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டி எடின்பர்க்கில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும் 306 ரன்களைச் சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக லீஸ்க் 85 ரன்களையும், மேத்யூ கிராஸ் 53 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, மைக்கேல் பிரேஸ்வெல் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு மார்ட்டின் கப்தில் - ஃபின் ஆலன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதில் கப்தில் 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட, மறுமுனையில் அரைசதம் கடந்த கையோடு ஃபின் ஆலன் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் வந்த தனே கிளெவரும் 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த மார்க் சாப்மேன் - டேரில் மிட்செல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்க் சாப்மேன் 101 ரன்களையும், டேரில் மிட்செல் 74 ரன்களையும் எடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 45.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியையும் பெற்று ஸ்காட்லாந்தை ஒயிட் வாஷ் செய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை