உலகக்கோப்பை தொடருக்கு முன் மார்ஷ் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!

Updated: Tue, May 07 2024 20:50 IST
உலகக்கோப்பை தொடருக்கு முன் மார்ஷ் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றான. அதன்படி இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான டி20 உலகக்கோப்பை அணியை அறிவித்தது. 

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இத்தொடரின் போது காயமடைந்த அவர், மேற்கொண்டு சிகிச்சை பெறுவதற்காக ஆஸ்திரேலியா திரும்பினார். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையிலும், அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

இதனையடுத்து தான் தற்போது டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும் மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் தற்போதுவரை காயத்திலிருந்து மீளாத காரணத்தால் இந்த உலகக்கோப்பையில் விளையாடுவாரா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னரே மிட்செல் மார்ஷ் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் என அந்த அணி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “மிட்செல் மார்ஷ் தனது காயத்திலிருந்து மீண்டு வருகிறார். ஆனாலும் நாங்கள் எதிர்பார்த்ததை விட அவர் மொதுவாகவே குணமடைந்து வருகிறர்.  அதன் காரணமாகவே அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னரே அவர் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில் எங்கள் முதல் போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒருமாத காலம் உள்ளது.

அதனால் அவர் தயாராவதற்கு போதுமான நேரம் உள்ளது. ஏனினும் அவர் பந்துவீச இன்னும் ஒன்றிரண்டு வாரங்கள் ஆகலாம். ஆனாலும் நாங்கள் தொடருக்காக கிளம்பும் முன்னர் அவர் தனது பந்துவீச்சு பயிற்சியை தொடங்கி விடுவார் என எதிர்பார்க்கிறோம். ஒருவேளை அவரால் பந்துவீச முடியவில்லை என்றாலும் நாங்கள் சில ஆல் ரவுண்டர்களையும் தேர்வு செய்துள்ளோம். அது எங்களுக்கு பெரும் உதவியாக அமையும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை