மேத்யூஸ், கருணரத்னே மீண்டும் அணியில் இணைவர் - பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர்!
இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் 24 வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தத்தை அறிவித்தது. புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி வீரர்களின் பங்களிப்பு, உடல் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என தெரிகிறது.
அதன்படி 2019 முதல் சிறப்பாக விளையாடுவதற்காக 50 சதவீதமும், உடற் தகுதிக்கு 20 சதவீதமும், தலைமை பண்பு, தொழில் முறை, வருங்கால திறமை, அணிக்கான பங்களிப்பு ஆகியவற்றுக்காக 10 சதவீதமும் வழங்கப்படும் என வீரர்களுக்கு வழங்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய விதிமுறைகளுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வங்கதேச தொடருக்கான இலங்கை அணியிலிருந்து மேத்யூஸ், தினேஷ் சண்டிமல், கருணரத்னே ஆகியோர் விலக்கப்பட்டனர்.
மேலும் இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பு குசால் மெண்டிஸிற்கு வழங்கப்பட்டது. இதையடுத்து வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 0-2 என்ற கணக்கில் தோற்றது.
இந்நிலையில், இலங்கை அணியின் மூத்த வீரர்களை மீண்டும் அணியில் சேர்க்கவுள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“நாங்கள் அணியை ஒரு திசையில் கொண்டு சென்றோம் என்று நினைக்கிறேன். இதனால் எந்த வீரருக்கான கதவுகளும் மூடப்படவில்லை. ஏனெனில் மேத்யூஸ் மற்றும் தினேஷ் சண்டிமல் இருவரும் அருமையான கிரிக்கெட் வீரர்கள். அவர்கள் தற்போது எங்கள் டெஸ்ட் அணியின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக அவர்களை நாங்கள் மீண்டும் எங்களது ஒருநாள் அணியில் சேர்க்க ஆலோசித்து வருகிறோம். ஏனெனில் வங்கதேச அணியுடனான தோல்வி எங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்தடுத்து வரும் ஒருநாள் தொடர்களுக்கான இலங்கை அணியில் நிச்சயம் மூத்த வீரர்கள் இடம் பெறுவதை நாங்கள் உறுதி செய்ய உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.