ஐபிஎல் 2022: வெங்கடேஷ் ஐயர் குறித்து பேசிய பிரெண்டன் மெக்கல்லம்!
15வது ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக டி காக் 50 ரன்களும், தீபக் ஹூடா 41 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 25 ரன்களுக்கே 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் வந்த ஆண்ட்ரியூ ரசல் (45) மற்றும் சுனில் நரைன் (22) ஆகியோரை தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து நடையை கட்டியதால் 14.3 ஓவரில் 101 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்தநிலையில், கொல்கத்தா அணியின் தொடர் தோல்விகள் குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய, கொல்கத்தா அணியின் பயிற்சியாளரான மெக்கல்லம், நடப்பு தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் வெங்கடேஷ் ஐயர் குறித்தும் பேசியுள்ளார்.
வெங்கடேஷ் ஐயர் குறித்து மெக்கல்லம் பேசுகையில், “வெங்கடேஷ் ஐயர் மிகுந்த வேதனையுடன் உள்ளார். பேட்டிங்கில் பழையபடி செயல்படுவதற்கு வெங்கடேஷ் ஐயர் கடினமான பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார், வலைபயிற்சியில் அதிகமான நேரங்கள் செலவிட்டு வருகிறார். நிச்சயமாக வெங்கடேஷ் ஐயர் இந்த மோசமான பார்மில் இருந்து மீண்டு வருவார்” என்று தெரிவித்தார்.