ஐபிஎல் தொடருக்கு திரும்பும் மிட்செல் ஸ்டார்க்; காரணம் இதுதான்!
கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் எப்பொழுதும் சிம்ம சொப்பனமாக இருக்கக்கூடியவர்கள். குறிப்பாக வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு. இவர்கள் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்தை உள்ளே கொண்டு வந்தால், அவர்களுக்கு அதைவிட ஆபத்தான வேறொன்று கிரிக்கெட்டில் இருக்கவே முடியாது.
கிரிக்கெட்டில் ஏன் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள் என்றால், கிரிக்கெட்டில் பெரும்பாலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சுத்துறையில் வலதுகை வீரர்களே அதிகம். எனவே வலது கை பேட்ஸ்மேன்கள் வலது கை பந்துவீச்சாளர்களை அதிகம் விளையாடிய பயிற்சி பெற்று வருவார்கள்.
இதன் காரணமாகவே இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடுவது வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு எப்பொழுதும் சவாலான ஒன்றாகவே இருந்து வருகிறது. இப்பொழுது உலக கிரிக்கெட்டில் ஷாகின் அப்ரிடி, ட்ரெண்ட் போல்ட் மற்றும் பெரிய தொடர்களில் பெரிய தாக்கத்தை உண்டாக்குவதை வாடிக்கையாகக் கொண்ட மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் இருக்கிறார்கள்.
கிரிக்கெட் உலகில் மிட்சல் ஸ்டார்க்கை பெரிய தொடர்களில் விளையாடுவதற்கு என்று பிறந்த வீரர் என்று புகழ்வார்கள். காரணம், உலகக் கோப்பை மாதிரியான பெரிய தொடர்கள் வந்தால், அதில் அவர் செயல்படும் விதம் இரண்டு மடங்கு வீரியமாக இருக்கும். தற்பொழுது நடந்து முடிந்த ஆஷஸ் தொடரே அதற்கு சாட்சி.
இவர் உலகின் நம்பர் 1 டி20 லீக்கான ஐபிஎல் தொடரில் விளையாடுவதை தொடர்ந்து புறக்கணித்து வந்தார். இவர் புறக்கணிப்புக்கு முக்கியக் காரணமாக, ஆஸ்திரேலியா அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதும் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை விளையாடுவதும் என இருந்து வந்திருக்கிறது. அவர் தேசிய அணிக்கு விளையாடுவதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார்.
இதன் காரணமாக ஸ்டார்க் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவதை புறக்கணித்தார். இவர் 2014 மற்றும் 15ஆம் ஆண்டு என இரு சீசங்களில் மட்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 27 ஆட்டங்களில் விளையாடி 34 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். ஓவருக்கு சராசரியாக 7.16 ரன்கள் கொடுத்திருக்கிறார். சிறப்பாக செயல்பட்டு இருந்த போதிலும் மேற்கண்ட காரணத்தால் அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை ஏலத்தில் வாங்கியது. ஆனால் இவர் பின்பு விலகி விட்டார்.
தற்பொழுது அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு மிட்சல் ஸ்டார்க் தயாராகி விட்டதாகவும், உறுதியாக கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. ஏன் கலந்து கொள்கிறார்? என்பதுதான் இதில் விஷயம். அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடக்க இருக்கும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.