சர்வதேச அரங்கில் சாதனை படைத்த மிதாலி ராஜ்!
இந்தியா - தென்ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டிட்யில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்களை இழந்து 248 ரன்களை எடுத்தது.
இந்திய அணி தரப்பில் பூனம் ராவத் 77 ரன்களையும், மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா ஆகியோர் தலா 36 ரன்களை எடுத்தனர்.
இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் 36 ரன்களை எடுத்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மிதாலி ராஜ் தன்வசப்படுத்தினார்.
இதுவரை மிதாலி ராஜ் இந்திய அணிக்காக 10 டெஸ்ட், 211 ஒருநாள், 89 டி20 போட்டிகளில் விளையாடி இச்சாதனைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.