நிதான ஆட்டம் குறித்து பதிலளித்த மிதாலி ராஜ்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 1-2 என இந்திய மகளிர் அணி தோல்வியடைந்துள்ளது. ஒருநாள் தொடரில் மிதாலி ராஜ் சிறப்பாக விளையாடினாலும் நிதானமாக விளையாடுவதால் ஸ்டிரைக் ரேட் குறித்த விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
முதல் ஒருநாள் ஆட்டத்தில் 108 பந்துகளில் 72 ரன்களும் 2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 92 பந்துகளில் 59 ரன்களும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 86 பந்துகளில் 75 ரன்களும் எடுத்தார்.
இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்த மிதாலி ராஜ், “என்னுடைய ஸ்டிரைக் ரேட் பற்றிய விமர்சனங்களை நான் படித்தேன். முன்பே சொன்னதுபோல அடுத்தவர்களுடைய அங்கீகாரம் எனக்குத் தேவையில்லை. நான் நீண்ட நாளாக விளையாடி வருகிறேன். அணியில் எனக்கான பொறுப்பை அறிந்துள்ளேன்.
அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக நான் விளையாடுவதில்லை. என்னுடைய அணி நிர்வாகம் எனக்கு அளித்த பொறுப்பை நிறைவேற்றவே விளையாடுகிறேன். நன்றாக விளையாடும்போது அதை நான் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஒட்டுமொத்த பேட்டிங் குழுவும் என்னைச் சுற்றி இயங்குகிறது.
என்னுடைய பயிற்சியாளரின் அறிவுரைப்படியே நான் விளையாடுகிறேன். மேல்வரிசை வீராங்கனைகள் ஆட்டமிழந்துவிட்டால் சூழலுக்கு ஏற்றாற்போல ஆடவேண்டும். அதனால் கடைசி ஓவர் வரை, இலக்கை நெருங்கும் வரை ஆடவேண்டும்” என்று தெரிவித்தார்.