மகளிர் உலகக்கோப்பை 2022: இளம் வீராங்கனைகளுக்கு மிதாலி ராஜ் அறிவுரை!

Updated: Sun, Feb 27 2022 11:00 IST
Image Source: Google

நியூசிலாந்தில் 12ஆவது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 4ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 

இந்திய அணி தனது முதல் லீக்கில் மார்ச் ஆம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. தொடர்ந்து 6ஆவது முறையாக உலக கோப்பை போட்டியில் அடியெடுத்து வைக்க உள்ள இந்திய கேப்டன் மிதாலிராஜ் நேற்று காணொலி வாயிலாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது பேசிய அவர், “கடந்த ஆண்டு சில இளம் வீராங்கனைகளை அணியில் சேர்த்து நிறைய தொடர்களில் சோதித்து பார்த்தோம். அதில் பெரும்பாலானவர்கள் குறிப்பாக ரிச்சா கோஷ், ஷபாலி வர்மா, மேக்னா சிங், பூஜா வஸ்ட்ராகர் போன்ற வீராங்கனைகள் உயரிய அளவுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் அவர்களுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கி இருக்கிறோம். இந்த தொடர்கள் அவர்களுக்கு உதவிகரமாக இருந்தது மட்டுமின்றி ஒரு கேப்டனாக எனக்கும் ஆடும் லெவன் அணிக்கு யார்-யார் பொருத்தமாக இருப்பார்கள் என்பதையும் அடையாளம் காட்டியது.

இளம் வீராங்கனைகளுக்கு இதற்கு முன்பு உலக கோப்பை போட்டியில் விளையாடிய அனுபவம் கிடையாது. இது அவர்களுக்கு புதிய தொடக்கம். அவர்களுக்கு நான் சொல்லும் ஒரே அறிவுரை இது தான். ‘இது போன்ற மிகப்பெரிய போட்டிகளில் உற்சாகமாக அனுபவித்து விளையாடுங்கள். உங்களுக்குள் நெருக்கடியை உள்வாங்கிக் கொண்டால், நீங்கள் உங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போகலாம்’ என்பது தான்.

சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் நான் விளையாடிய விதமும், ரன் சேர்ப்பும் (3 அரைசதம் உள்பட 232 ரன்) மகிழ்ச்சி அளிக்கிறது. அதே பார்மை உலக கோப்பை போட்டியிலும் தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நியூசிலாந்து தொடரில் சில ஆட்டங்களுக்கு தீப்தி ஷர்மா துணை கேப்டனாக இருந்தார். ஆனால் உலக கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் துணை கேப்டனாக செயல்படுவார். அனுபவமும், இளமையும் கலந்த அணியாக இந்தியா உள்ளது.

ஒரு வேளை அணிகளுக்குள் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் இந்த உலக கோப்பையில் அனைத்து ஆட்டங்களையும் தலா 9 வீராங்கனைகளுடன் நடத்தலாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூறியது பற்றி கேட்கிறீர்கள். அது பற்றி நான் அதிகமாக சிந்திக்க விரும்பவில்லை. வலுமிக்க முழுமையான அணியாக விளையாடவே விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை