அமெரிக்காவை கண்டு மற்ற அணிகள் பயப்படலாம் - முகமது கஃப்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நேற்று கோலாகலமாக தொடங்கியது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கனடா அணியானது நவ்நீத் தலிவால் மற்றும் நிக்கோலஸ் கிர்டன் ஆகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 194 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக நவ்நீத் தலிவால் 61 ரன்களையும், நிக்கோலஸ் கிர்டன் 51 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து கடின இலக்கை துரத்திய அமெரிக்க அணியின் தொடக்க வீரர்கள் ஸ்டீவன் டெய்லர் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் மொனாங்க் படேல் 16 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனையடுத்து இணைந்த ஆண்ட்ரிஸ் கஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
இதில் ஆண்ட்ரிஸ் கஸ் 65 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆரோன் ஜோன்ஸ் 94 ரன்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் அமெரிக்க அணியானது 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், தங்களது முதல் உலகக்கோப்பை தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணியை பார்த்து மற்ற அணிகள் பயப்படலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய முகமது கைஃப், "இந்த போட்டியில் அவர்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தனர், ஆனால் ஜோன்ஸ் வேறு திட்டங்களை வைத்திருந்தார். அவர் கனடாவுக்கு எதிராக நிறைய ரன்கள் எடுத்துள்ளார். நீங்கள் வழக்கமாக ஒரு இன்னிங்ஸில் 10 சிக்ஸர்களைப் பார்க்க முடியாது.
அவரது அபாரமான பேட்டிங்கின் மூலம் அமெரிக்க அணியானது எந்த அணியையும் தொந்தரவு செய்யலாம், இப்போது அவர்களின் போட்டியாளர்கள் அவர்களைபக் கண்டு பயப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறிய கருத்தானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.