ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த முகமது நபி!
அஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் வங்கதேச அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது நேற்று முன் தினம் ஷார்ஜாவில் நடந்து முடிந்தது. இப்போட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஃப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் ஆஃப்கானிஸ்தான் அணியும், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வங்கதேச அணியும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றியில் மிக முக்கிய பங்கினை வகித்த ஆஃப்கானிஸ்தான் அணியின் அனுபவ ஆல் ரவுண்டர் முகமது நபி தனது ஓய்முடிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்தகையில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அந்தவகையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் இத்தொடரில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அந்தவகையில் இந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றாக ஆஃப்கானிஸ்தானும் தேர்வாகியுள்ளது. இதனால் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் தான் அத்தொடருன் தான் ஓய்வுபெறவுள்ளதாக முகமது நபி அறிவித்துள்ளார். இருப்பினும் அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஓய்வை அறிவித்துள்ளதன் காரணமாக டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 38 வயதாகும் முகமது நபி, கடந்த 2009ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தான் அணிக்காக அந்த அணியின் அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து தனது எண்ட்ரியை கொடுத்திருந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அந்தவகையில் இதுவரை 165 ஒருநாள் போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ள முகமது நபி, அதில் 2 சதங்கள் மற்றும் 17 அரைசதங்கள் என மொத்தமாக 3549 ரன்களைக் குவித்துள்ளார். இதுதவிர 165 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 171 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். மேற்கொண்டு ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாகவும் முகமது நபி சிறப்பாக செயல்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.