வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த முகமது ஷமி; உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது சந்தேகம்?
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்குகிறது. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணையும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச்செய்துள்ளது. அதன்படி இத்தொடரானது மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதன் காரணமாக அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களது பயிற்சிகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.
கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி, அதன்பின் நடைபெற்ற எந்தவொரு சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாடாமல் இருந்து வந்தார். இதையடுத்து தனது இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முகமது ஷமி இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முகமது ஷமி, குதிகாலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாகவும் முழுமையாக மீண்டுவர சில காலம் ஆகும் என்றும் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதேசமயம் அவர் தனது காயத்திலிருந்து மீண்டுவர ஏறத்தாழ மூன்று மாதங்கள் மேல் ஆகும் என்பதால், அவரால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க முடியாது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இது இந்திய அணிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.