லக்னோ அணியால் மிகக்பெரும் தொகைக்கு ஏலம் போகும் ராகுல் - தகவல்!

Updated: Mon, Nov 29 2021 18:04 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14ஆவது ஐபிஎல் சீசனுக்கு பிறகு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 15ஆவது ஐபிஎல் சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக இரண்டு அணிகள் சேர்ந்து மொத்தம் 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அண்மையில் நடைபெற்று முடிந்த புதிய அணிகளுக்கான ஏலத்தில் புதிய இரண்டு அணிகள் ஏலத்தில் எடுக்கப்பட்டது.

அதன்படி அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாக வைத்து இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது ஒவ்வொரு அணியிலும் தலா நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும் மீதமுள்ள வீரர்களை ஏலத்தில் விடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் அணிக்கு கேப்டனாக விளையாடி வரும் கே.எல் ராகுல் இம்முறை பஞ்சாப் அணிக்காக விளையாட விரும்பவில்லை என்று தெரிகிறது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் அதிரடியாக விளையாடிய அவர் நிச்சயம் ஏலத்திற்கு சென்றால் 20 கோடி ரூபாய் வரை செல்வார் என்று ஆகாஷ் சோப்ரா கூறியிருந்தார். இந்நிலையில் புதிதாக உருவாகியுள்ள லக்னோ அணி ராகுலை 20 கோடிக்கு ஏலத்தில் எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து பேச்சுவார்த்தையும் ராகுலுடன் அவர்கள் நடத்தி வருவதாக தெரிகிறது.

அதன்படி ராகுல் பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் நிச்சயம் 20 கோடி ரூபாய் கொடுத்து அவரை லக்னோ அணி வாங்கும் என்று தெரியவந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக 11 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ராகுல் கடந்த நான்கு ஆண்டுகளாகவே ஒவ்வொரு சீசனிலும் சராசரியாக 600 ரன்களை அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை