நான் விளையாடிய மிகவும் திருப்திகரமான ஒருநாள் போட்டி - ஆடம் ஸாம்பா!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் அஹ்மதாபாத் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஆடம் ஸாம்பா பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலுமே சிறப்பாக செயல்பட்டார்.
அவர் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். சிறப்பாக பந்துவீசிய அவர் 10 ஓவர்களில் வெறும் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஃபீல்டிங்கின்போது இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லேயின் கேட்ச்சினைப் பிடித்து அசத்தினார். இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியே ஆஸ்திரேலியாவுக்காக நான் விளையாடிய மிகவும் திருப்திகரமான ஒருநாள் போட்டி என ஆடம் ஸாம்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நேர்மையாக கூறவேண்டுமென்றால் இங்கிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டி ஆஸ்திரேலிய அணிக்காக நான் விளையாடிய மிகவும் திருப்திகரமான ஒருநாள் போட்டி என்று நான் கூறுவேன். நான் பேட் செய்த விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. பேட்டிங்கில் எனது பங்களிப்பை அளித்தது மிகவும் மகிழ்ச்சியளித்தது. நான் உலகின் மிகச் சிறந்த ஃபீல்டர்களில் ஒருவராக அறியப்பட்ட நபர் கிடையாது. ஆனால், நேற்று நான் ஃபீல்டிங் செய்த விதம் எனக்கு திருப்தியளித்தது” என்றார்.