ஐபிஎல்: சிஎஸ்கேவின் கேப்டனாக தோனி செய்த சில சாதனைகள்!
ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து தோனி விலகிக்கொண்டு, ஜடேஜாவை கேப்டனாக நியமித்துள்ளார். சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா பொறுப்பேற்றுள்ளார்.
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து அந்த அணியை வழிநடத்திவரும் தோனி, ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கேவை வீரநடை போடவைத்திருக்கிறார்.
தோனியின் சிறப்பான கேப்டன்சியால் 4 முறை கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி. ஒரேயொரு சீசனை (2020) தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணியை பிளே ஆஃபிற்கு அழைத்து சென்றவர் தோனி. மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை மாற்றிக்கொண்டே இருக்கும். ஆனால் தோனியோ, வலுவான கோர் அணியை கட்டமைத்து, அவர்களை சுற்றி சில வீரர்களை மட்டுமே மாற்றிக்கொண்டு வந்தார். ஆடும் லெவனிலும் பெரிதாக மாற்றங்களை செய்யாமல், தன் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்பளித்து சாதித்து காட்டியவர் தோனி.
ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி படைத்த சாதனைகள்:
அதிகமான போட்டிகளில் கேப்டன்சி மற்றும் வெற்றி
ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியை 204 போட்டிகளில் கேப்டனாக இருந்து வழிநடத்திய தோனி 121 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். அவரது கேப்டன்சி வெற்றி சதவிகிதம் 59.60 ஆகும். 82 தோல்விகளை அடைந்துள்ளார்.
நான்கு முறை கோப்பையை வென்றது
ஐபிஎல்லில் 4 முறை சிஎஸ்கே அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த தோனி, அதிக முறை கோப்பையை வென்ற கேப்டன்கள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு(5 முறை) அடுத்த 2ஆம் இடத்தில் உள்ளார்.
அதிக முறை ஐபிஎல் ஃபைனலுக்கு முன்னேற்றம்
ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி 2016 மற்றும் 2017 ஆகிய 2 சீசன்களிலும் சூதாட்ட புகாரில் தடைபெற்றது. அந்த 2 சீசன்களை தவிர 2008ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டுவரை தோனியின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி 12 சீசன்கள் ஆடியுள்ளது.
அந்த 12 சீசன்களில் 3 சீசனை தவிர மற்ற 9 சீசன்களிலும் ஃபைனலுக்கு முன்னேறியது சிஎஸ்கே அணி. அதிகமுறை ஐபிஎல் ஃபைனலுக்கு முன்னேறிய அணி சிஎஸ்கே தான். 9 ஃபைனலில் 4 முறை வெற்றி பெற்று கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி.
2 சாம்பியன்ஸ் லீக் கோப்பை
ஐபிஎல் டைட்டில் மட்டுமல்லாது 2 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் சிஎஸ்கேவிற்கு வென்று கொடுத்தார் தோனி.
அதிக முறை பிளே ஆஃபிற்கு அணியை கொண்டு சென்ற கேப்டன்
சிஎஸ்கே அணி 2020ம் ஆண்டு ஐபிஎல் சீசனை தவிர மற்ற ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறியது. இந்த சாதனைக்கு சொந்தக்கார ஒரே அணி சிஎஸ்கே தான். ஒரே கேப்டன் தோனி தான்.