சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோனியின் பதில்!

Updated: Sat, Oct 16 2021 12:09 IST
MS Dhoni Evasive On The Question Of Playing Next IPL Season (Image Source: Google)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றுடன் 14ஆவது ஐபிஎல் தொடரானது கோலாகலமாக நிறைவு பெற்றது. முக்கியமான இந்த இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதில் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 192 ரன்கள் குவிக்க அதன் பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 165 ரன்களை மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

கடந்த ஆண்டு முதல் அணியாக வெளியேறிய சென்னை அணி இந்த ஆண்டு கோப்பையை வென்றுள்ளது ரசிகர்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தோனி நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் கோப்பையுடன் விடைபெற வேண்டும் என்பதே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பாக இருந்தது. 

தற்போது 40 வயதை கடந்த தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா ? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. மேலும் இந்த கோப்பையை கைப்பற்றிய பின்னர் தான் தோனி ஐ.பி.எல்-லில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அனைவரும் விரும்பினர். இந்நிலையில் தற்போது இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் ஒருமுறை தோனி கோப்பையை ஏந்தியுள்ளார். இதன் காரணமாக இனி தோனியின் எதிர்காலம் என்ன ? அவர் என்ன முடிவு எடுத்திருக்கிறார் ? என்பது குறித்த கேள்வியே அனைவரது மத்தியிலும் இருந்தது.

இதனை பரிசளிப்பு விழாவின் போது சரியாக கேட்ட ஹர்ஷா போக்லே அடுத்த ஆண்டு உங்களது திட்டம் என்ன ? என தோனியிடம் கேட்டார். அதற்கு ஸ்மார்ட்டாக பதிலளித்த தோனி, “எல்லாம் பிசிசிஐயின் கையில்தான் உள்ளது. ஏனெனில் அடுத்த ஆண்டு மேலும் இரண்டு அணிகள் புதிதாக இணைய இருக்கின்றன. அதன் காரணமாக என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

சிஎஸ்கே அணிக்காக நான் விளையாடுவது முக்கியமல்ல. சிஎஸ்கே அணியின் பெஸ்ட் எப்படி கிடைக்கும் என்பதுதான் சரியான முடிவு. அடுத்த 10 ஆண்டுகளுக்கான சிஎஸ்கே அணி ஒரு கோர் டீமை உருவாக்க வேண்டும். அது மட்டுமே தற்போது நாங்கள் உற்று நோக்கும் விசயமாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இன்னும் சென்னை அணியில்தான் இருக்கிறேன் எங்கும் போகவில்லை” என்று தெரிவித்தார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன் காரணமாக நிச்சயம் அடுத்த ஆண்டும் சென்னை அணியில் தோனியை பார்க்கலாம் என்பது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமின்றி சி.எஸ்.கே நிர்வாகமும் அடுத்து ஆண்டு தோனி விளையாட வேண்டும் என்று விருப்பப்டுவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை