பயிற்சியில் களமிறங்கிய ‘தல’ தோனி; வைரல் காணொளி!
வரும் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போட்டி நடைபெற உள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் தங்களது சொந்த மண்ணில் தோனியை காண உற்சாகமாக உள்ளனர்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், அடுத்த சீசன் தொடங்க 5 மாதங்களுக்கு முன்பு தோனி தனது பயிற்சியை தொடங்கியிருக்கிறார். சையித் முஷ்டாக் அலி கோப்பைக்காக ஜார்க்கண்ட் அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஜார்க்கண்ட் அணியுடன் சேர்ந்துள்ள தோனி பயிற்சியை தொடங்கியிருக்கிறார். தோனி பேட்டிங் செய்யும் காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. முதலில் லேசான பயிற்சியை தொடங்க இருக்கும் தோனி பிறகு தனது பயிற்சி வீரியத்தை அதிகரிக்க உள்ளார்.
தோனிக்கு தற்போது 40 வயதாகிறது. ஏற்கனவே காலில் மூட்டு வலி இருக்கிறது. அதற்காக சிகிச்சை எடுத்து வரும் தோனி, டென்னிஸ் பயிற்சியிலும் ஈடுபட உள்ளார். இதனிடையே, ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சென்னை அணி என்ன செய்யப் போகிறது என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஜடஜாவை வேறு எந்த அணிக்கும் டிரான்ஸ்பர் செய்ய விரும்பவில்லை என சிஎஸ்கே திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், ஜடேஜா தனது ஒப்பந்த முடியும் வரை சிஎஸ்கே உடன் தான் இருப்பார் என கூறப்படுகிறது. மினி ஏலம் முடிந்த பிறகு சிஎஸ்கே வின் முக்கிய வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் இணைந்து தங்களது பயிற்சியை சென்னையில் தொடங்க உள்ளனர்.