ஐபிஎல் 2022: அடுத்த ஆண்டும் இன்னும் கூடுதல் பலத்துடன் விளையாடுவோம் - எம் எஸ் தோனி!
ஐபிஎல் 15ஆவது சீசன் 59ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பிட்ச் முழுக்க முழுக்க வேகத்திற்கு சாதகமாக இருந்ததால் முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் முதல் வரிசை வீரர்கள் கெய்க்வாட் (7), கான்வே (0), மொயின் அலி (0), உத்தப்பா (1) போன்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து ராயுடு (10), தோனி (36), ஷிவம் துபே (10), பிராவோ (12) போன்றவர்கள் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், சிஎஸ்கே அணி 16 ஓவர்களில் 97/19 ரன்களை சேர்த்தது.
மும்பை டெக்னிக்கை பயன்படுத்திய தோனி, வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ் சௌத்ரி, சமர்ஜித் சிங் இருவரும் தொடர்ந்து பந்துவீச வைத்தார். இதனால் இஷான் கிஷன் (6), ரோஹித் ஷர்மா (18), டேனியல் சாம்ஸ் (1), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து ஹிருத்திக் ஷோஹீன் (18), திலக் வர்மா (34), டிம் டேவிட் (16) போன்றவர்கள் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், மும்பை அணி 14.5 ஓவர்களில் 103/5 ரன்களை சேர்த்து, வெற்றிபெற்றது.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது. இப்போட்டி முடிந்தப் பிறகு சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனி பேட்டி கொடுத்தார்.
அதில், “130 ரன்களுக்கு குறைவான இலக்கை சமாளிப்பது மிகவும் கஷ்டம். முடிவை பற்றி கவலைப்படாதீர்கள். உங்களது முழு திறமையையும் வெளிப்படுத்துங்கள் என பௌலர்களிடம் கூறினேன். இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும் தொடர்ந்து அபாரமாக பந்துவீசினார்கள். இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும் அழுத்தங்களை உருவாக்கினார்கள்.
இந்த இரண்டு பௌலர்களுடன் சேர்த்து, அடுத்த ஆண்டில் மேலும் இரண்டு பௌலர்கள் (தீபக் சஹார், ஆடம் மில்னே) ஆகியோர் இணைந்துவிடுவார்கள். இதனால், அணியின் வேகப்பந்து வீச்சு துறை பலமிக்கதாக மாறிவிடும். இன்றைய நாள் எங்களுக்கானது கிடையாது. இப்போட்டியில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு, அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.