தோனி எனது வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டுள்ளார் - ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இவரது அசத்தல் ஆட்டம் காரணமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டின் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 5-ம் இடம் பிடித்துள்ளார். நடப்பு ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதே ஆட்டத்தில் பேட்டிங்கில் 17 பந்துகளில் 33 ரன்கள் விளாசி இருந்தார்.
இந்திய அணியின் முக்கிய வெற்றிகளில் இவரது பங்கு நிச்சயம் இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். அதை இவரும் நிரூபித்து வருகிறார். இந்நிலையில், தனது வளர்ச்சியில் தோனிக்கு பெரும் பங்கு இருப்பதாக அவரே ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஒரு குழந்தையை போல வாழ்க்கையையும், நான் சார்ந்த விளையாட்டு குறித்தும் அறிந்து கொள்ள முயற்சி செய்வேன். தோனி எனது வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டுள்ளார். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரை கூர்ந்து கவனிப்பேன். அதன் மூலம் கற்றுக் கொள்ள முயல்வேன்.
அவரது மைண்ட் செட் மற்றும் அவர் பெற்றுள்ள அறிவை நான் கவனிப்பேன். அது களத்தில் எனக்குள்ளும் பிரதிபலிக்கிறது. சில தோல்விகள் அனுபவங்களாக அமையும். அது நமக்கு பாடம் புகட்டும். ஒரு அணியின் வெற்றியில் ஃபினிஷர்களின் பணி பிரதானம் என கருதுகிறேன்.
என்ன தான் வலுவான அணியாக இருந்தாலும், வெற்றிக்கு அருகில் நெருங்கினாலும் லோயர் ஆர்டர் அல்லது ஃபினிஷர்கள் ஃபினிஷிங் டச் கொடுக்கவில்லை எனில் அது முழுமை பெற்றதாக இருக்காது” என தெரிவித்துள்ளார்.