சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர் தான் - காசி விஸ்வநாதன்!
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்ட பிரச்சினைகளும், சர்ச்சைகளும் இன்னும் தீராமல் உள்ளது. ஜடேஜாவிடம் இருந்த கேப்டன்சி மீண்டும் தோனியிடம் கொண்டு வந்த போதும், ப்ளே ஆஃப் கூட முன்னேறாமல் வெளியேறியது.
சென்னை அணி மோசமான நிலையில் இருப்பதால் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி விளையாடுவாரா என்ற அப்போதே கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்திருந்த தோனி, நிச்சயம் 2023ஆம் ஆண்டு ஐபிஎல்-ல் சிஎஸ்கே உடையில் இருப்பேன் உள்ளேன். ஆனால் எந்த பதவியில் இருப்பேன் என்பதை இப்போது கூற முடியாது என சூசகமாக கூறியிருந்தார். இதனால் ஆலோசகராக தோனி செயல்படவுள்ளார் என கூறப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தான் மீண்டும் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் கொடுத்துள்ள பேட்டியில், “எங்களின் திட்டத்தில் எந்தவொரு மாற்றமும் கிடையாது. மாற்றம் செய்யப்போகிறோம் என நாங்கள் எப்போதும் கூறியது இல்லையே, அவரே கேப்டனாக இருப்பார்” என்பது போன்று கூறியுள்ளார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த வருடமே தோனிக்கு அடுத்து வரும் கேப்டனை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக தான் ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால் அது சரிவரவில்லை. இந்த சூழலில் தோனி ஓய்வு பெறும் வரை அடுத்த கேப்டனை தயார் செய்யாமல் இருப்பது சிஎஸ்கேவுக்கு ஆபத்து தான் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.