மும்பை அணியிலிருந்து விலகி கோவாவிற்காக விளையாட தயாராகும் ஆர்ஜுன் டெண்டுல்கர்!

Updated: Thu, Aug 11 2022 22:40 IST
Image Source: Google

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானும், சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணியில் இடம்பெற்றிருந்தார் 22 வயது அர்ஜுன் டெண்டுல்கர். 

இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் இருந்துவந்தாலும், அந்த அணியில் நிறைய சிறந்த வீரர்கள் இருப்பதால், அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பதில்லை.

உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதுவும் உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 2020-2021 சையத் முஷ்டாக் அலி தொடரில் ஹரியானா மற்றும் பாண்டிச்சேரி அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடினார் அர்ஜுன் டெண்டுல்கர்.

ரஞ்சி தொடருக்கான மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றிருந்தபோதிலும், அவருக்கு விளையாடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அதற்காக மும்பை அணியின் தலைமை தேர்வாளர் சலில் வருத்தம் தெரிவித்தார்.

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஐபிஎல்லிலும் விளையாட வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்திய அணியின் வலைப்பந்துவீச்சு பந்துவீச்சாளராகவு இருந்திருக்கிறார் அர்ஜுன் டெண்டுல்கர். ஆனால் அவருக்கு உள்நாட்டு போட்டிகளிலும் சரி, ஐபிஎல்லிலும் சரி, விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காததால் அவரது திறமையை வெளிக்காட்ட முடியாத சூழல் இருக்கிறது.

எனவே தனக்கு ஆட வாய்ப்பு கிடைக்கும் அணியில் இணைந்து, களத்தில் தனது திறமையை காட்டி, அனைவருக்கும் தனது திறமையை நிரூபிக்க நினைத்த அர்ஜுன் டெண்டுல்கர், மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணியில் இணைகிறார். 

இதற்காக மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லா சான்றுக்கு விண்ணப்பித்துள்ளார். அர்ஜுன் டெண்டுல்கரின் எதிர்காலமும் நலனும் கருதி அவருக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுவிடும். அதனால், இந்த ஆண்டு நடக்கும் உள்நாட்டு தொடர்களில் அர்ஜுன் டெண்டுல்கர் கோவா அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை