ஐபிஎல் 2022: தனது கடின காலங்கள் குறித்து மனம் திறந்த ரிங்கு சிங்!

Updated: Thu, May 19 2022 20:49 IST
Image Source: Google

நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் இளம் இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங். 

மேலும் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடியும், அணியை வெற்றி பெற செய்ய முடியாத சோகத்தில் களத்திலேயே கண் கலங்கி நின்றவர் ரிங்கு. 24 வயதான அவர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். உள்ளூர் கிரிக்கெட்டில் உத்தரப் பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். 

அவரது அப்பா கான்சந்திர சிங், எல்பிஜி சிலிண்டர் விநியோக நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நிதி சிக்கலால் தவித்து வரும் தனது குடும்பத்திற்கு தன்னால் முடிந்த வேலையை செய்து உதவ வேண்டும் என முடிவு செய்துள்ளார். இருந்தாலும் அவருக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் வந்துள்ளது.

தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் தன் சொந்த மாநில அணிக்காக விளையாடி வந்துள்ளார் ரிங்கு. 2017 வாக்கில் பஞ்சாப் அணி அவரை ஏலத்தில் வாங்கியது. 2018-19 ரஞ்சி கோப்பை தொடரில் 953 ரன்களை குவித்திருந்தார்.

தொடர்ந்து 2018-இல் கொல்கத்தா அணியுடன் இணைந்தார் ரிங்கு. இதுவரை மொத்தம் 17 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 251 ரன்களை எடுத்துள்ளார். இதில் நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 174 ரன்களை எடுத்துள்ளார். சிறந்த ஃபீல்டராகவும் அறியப்படுகிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 148.72.

கடந்த 2021 ஐபிஎல் சீசனை காயம் காரணமாக மிஸ் செய்திருந்தார் ரிங்கு. இந்நிலையில், தான் கடந்த வந்த பாதை குறித்து பேசியுள்ளார் ரிங்கு. 

அதில் "2021 விஜய் ஹசாரே தொடரின் போது எனக்கு மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது. எனக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் என் அப்பா 2 முதல் 3 நாட்கள் வரை சாப்பிடாமல் இருந்தார். எங்கள் குடும்பம் என்னை மட்டுமே முழுவதுமாக நம்பியுள்ளது. அப்போது நானும் வருத்தமாக தான் இருந்தேன். 

ஆனாலும் காயத்தில் இருந்து நான் விரைவில் குணம் பெற்றுவிடுவேன் என்பது எனக்கு தெரியும். எனக்கு தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகம். அப்பாவுக்கு ஆறுதல் சொன்னேன். கிரிக்கெட்டில் காயம் ஏற்படுவது வழக்கமானது தான் என சொல்லி இருந்தேன்.

காயத்தினால் நான் கிரிக்கெட் விளையாட முடியாமல் போனது எனக்கு கவலையை கொடுத்தது. காயம் அடைந்தபோது எனது சிந்தனை முழுவதும் ஐபிஎல் கிரிக்கெட்டை சுற்றி தான் இருந்தன. ஏனெனில் நான் களத்திற்கு திரும்ப ஏழு மாத காலம் வரை ஆகும் என சொன்னார்கள். அறுவை சிகிச்சைக்கு பிறகு இப்போது மீண்டு வந்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை