இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த நாசிர் ஹுசைன்!

Updated: Wed, Jul 06 2022 15:23 IST
Nasser Hussain Credits Rob Key for England's Test Side resurgence (Image Source: Google)

இந்தியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது.

ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜோ ரூட், பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு மறக்க முடியாத வெற்றியை வழங்கினார்கள். 76.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது இங்கிலாந்து அணி. 

ஜோ ரூட் 142, பேர்ஸ்டோ 114 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆனது. 2007-க்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தது. ஆனால் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும் மிகச் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணி 5ஆவது டெஸ்டை வெல்ல உதவினார்கள். 

சமீபகாலமாக இங்கிலாந்து அணிக்குக் கிடைத்துள்ள வெற்றிகள் பற்றி இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசிர் ஹுசைன் கூறுகையில், “இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சீர்படுத்த ஸ்டோக்ஸையும் மெக்கல்லமையும் நியமித்தபோது  இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் ராப் கீ என்ன கூறினார்? பயணத்தை அனுபவியுங்கள் என்றார். அதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம். இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான வெற்றிகளைப் பார்க்க அபாரமாக இருந்தான. 

ஆஷ்லி கைல்ஸ் (நிர்வாக இயக்குநர்), ஜோ ரூட் (கேப்டன்), கிறிஸ் சில்வர்வுட் (பயிற்சியாளர்) ஆகியோரை விடுவித்து மூன்று பேர் புதிதாக நியமிக்கப்பட்டபோது கேள்விகள் எழுந்தன. நிர்வாக இயக்குநராக ராப் கீ நியமிக்கப்பட்டபோது அவருக்கு கிரிக்கெட் நிர்வாகம் பற்றி என்ன தெரியும், இதற்கு முன்பு அந்த வேலையை அவர் செய்ததே இல்லையே எனக் கேட்டார்கள். ஆனால் இதுவரை சரியான முடிவுகளையே அவர் எடுத்துள்ளார். 

இயன் போத்தம், பிளிண்டாஃப் ஆகிய ஆல்ரவுண்டர்கள் கேப்டன் பதவியில் ஜொலிக்காததால் மற்றொரு ஆல்ரவுண்டரான ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டபோதும் கேள்விகள் எழுந்தன. ஆனால் ஒரு கேப்டனாக அவர் தன்னை நிரூபித்துள்ளார். 

இங்கிலாந்து அணி அச்சம் கொள்ளாமல் களமிங்குவதை மெக்கல்லம் உறுதி செய்துள்ளார். பெரிதாக யோசித்து கவலைப்படாமல் அணி வீரர்கள் விளையாடுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை