NED vs ENG, 1st ODI: நெதர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து இமாலய வெற்றி!
இங்கிலாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஃபிலிப் சால்ட் ஆகிய இருவரும் களமிறங்கினர். ராய் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஃபிலிப் சால்ட் அடித்து ஆடினார்.
சால்ட்டுடன் 2ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் மலானும் அடித்து ஆட இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிரடியாக ஆடிய சால்ட் 82 பந்தில் சதமடித்தார். 93 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸருடன் 122 ரன்களை குவித்தார் சால்ட். சால்ட்டும் மலானும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 222 ரன்களை குவித்தனர்.
சால்ட்டை தொடர்ந்து டேவிட் மலானும் சதமடித்தார். 4ஆம் வரிசையில் இறங்கிய ஜோஸ் பட்லர் காட்டடி அடித்து 46 பந்தில் சதமடித்தார். ஜோஸ் பட்லர் சிக்ஸர்களாக விளாசி சிக்ஸர் மழை பொழிந்தார். சதத்திற்கு பின்னரும் அடி வெளுத்துவாங்கினார். டேவிட் மலான் ஆட்டமிழந்த பின்னர் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி காட்டடி அடித்தார். 18 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார் லிவிங்ஸ்டோன். ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இங்கிலாந்து வீரர் அடித்த அதிவேக அரைசதம் இதுதான்.
டேவிட் மலான் 109 பந்தில் 125 ரன்களையும், ஜோஸ் பட்லர் 70 பந்தில் 162 ரன்களையும் குவித்தனர். லிவிங்ஸ்டோன் 22 பந்தில் 66 ரன்களை விளாச, 50 ஓவரில் 498 ரன்களை குவித்து சாதனை படைத்தது இங்கிலாந்து அணி. 49ஆவது ஓவரை அருமையாக வீசிய ஸ்னேடர் வெறும் 7 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதனால் 500 ரன்களை எட்டி வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது.
இன்று இங்கிலாந்து அணி அடித்த 498 ரன்கள் தான், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் ஆஸ்திரேலியாவுகு எதிராக இங்கிலாந்து அடித்த 481 ரன்கள் தான் சாதனையாக இருந்தது. தங்கள் சாதனையை தாங்களே தகர்த்து புதிய வரலாறு படைத்துள்ளது இங்கிலாந்து அணி.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜித் சிங் 13 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய முசா அஹ்மத் 21, டாம் கூப்பர் 23, பாஸ் டி லீடே 28 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் மேக்ஸ் ஓடவுட் அரைசதம் அடித்தார். அதன்பின் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஓடவுட், டாப்லி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதையடுத்து களமிறங்கிய ஸ்காட் எட்வர்ட்ஸ் ஒருமுனையில் அதிரடியாக விளையாட, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தவாரே இருந்தது. இதில் அரைசதம் கடந்திருந்த ஸ்காட் எட்வர்ட்ஸ் மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 73 ரன்களைச் சேர்த்திருந்தார்.
இதனால் 49.4 ஓவர்களில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 3 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லி, டாப்லி, சாம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.