NED vs IRE, 3rd ODI: மைபர்க் அதிரடியில் தொடரை வென்றது நெதர்லாந்து!
நெதர்லாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக கெவின் ஓ பிரையன் - பால் ஸ்டிர்லிங் இணை களமிறங்கியது. இதில் கெவின் ஓ பிரையன் ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து பால் ஸ்டிர்லிங், கேப்டன் பால்பிர்னி ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஹேரி டெக்டர்- டாக்ரெல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தது. இதில் ஹேரி டெக்டர் அரை சதம் விளாசினார். பின்னர் 58 ரன்களில் டெக்டர் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 40 ரன்களில் டாக்ரெலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்கள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 49.1 ஓவர்களில் அயர்லாந்து அணி 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நெதர்லாந்து அணியில் கிளாசென், வான் பீக் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு ஸ்டீபன் மைபர்க் - மேக்ஸ் ஓடவுட் இணை சிறப்பான தொடக்கத்தை தந்தது. இதில் மேக்ஸ் ஓடவுட் 36 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த எட்வர்ட்ஸ் ரன் ஏதுமின்றி, முசா அஹ்மத் 17 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்டீபன் மைபர்க் அரைசதம் கடந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இதன் மூலம் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிபெறச் செய்த ஸ்டீபன் மைபர்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.