NED vs PAK, 2nd ODI: நெதர்லாந்தை 186 ரன்களில் கட்டுப்படுத்தியது பாகிஸ்தான்!
நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டில் ரோட்டர்டேமில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய அந்த அணியில் விக்ரம்ஜிட் சிங், மேக்ஸ் ஓடவுட் இணை தலா ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய வெஸ்லி பெர்ரெஸியும் 3 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த பாஸ் டி லீட் - டாம் கூப்பர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதமும் கடந்து அசத்தினர்.
பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாஸ் டி லீட் 89 ரன்களிலும், டாம் கூப்பர் 66 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 44.1 ஓவர்களில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், 186 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹாரிஸ் ராவூஃப், முகமது நவாஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.