இந்தியாவுக்கு எதிரான போட்டி; உலக கோப்பை இறுதி போட்டியை போன்றது - நெய்ல் வாக்னர்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா - நியூசிலாந்து அணிகள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் வெற்றி பெறும் அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும். இரண்டு வருடங்களில் டெஸ்டில் தலைசிறந்த அணியாக கருதப்படும். போட்டி நடைபெறும் இங்கிலாந்து மைதானம் நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் நியூசிலாந்து அணியில் டிரெண்ட் போல்ட், டிம் சௌதி, கைல் ஜேமிசன், நெய்ல் வாக்னர் என அபாரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதே இதற்கு காரணம்.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை இறுதிப் போட்டியை போன்றது என நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் நெய்ல் வாக்னர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நெய்ல் வாக்னர், ‘இந்திய அணிக்கெதிரான இப்போட்டியானது எனக்கு உலகக்கோப்பை இறுதிப் போன்று போன்றது. நியூசிலாந்து அணிக்கு இதுவரை நான் ஒரு நாள் அல்லது டி20 கிரிக்கெட் அணிக்காக விளையாட முடியாதது மிகப்பெரிய ஏமாற்றம். இனிமேலும் அணியில் இடம் கிடைக்கும் என்பது எனக்கு தெரியாது. உலகக்கோப்பை இறுதிப் போட்டி போன்று, முழு உத்வேகத்துடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய முழு கவனமும் உள்ளது.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் கடினமானது. உலகின் பல்வேறு பகுதியில் விளையாடுவது எளிதானது அல்ல. மிகவும் சவாலானது. கடினமான சூழ்நிலையில் உங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு நீங்கள் பெற முடியும்’’ என்று தெரிவித்தார்.