T20 WC 2024: மேக்ஸ் ஓடவுட் அரைசதம்; நேபாளை வீழ்த்தியது நெதர்லாந்து!

Updated: Wed, Jun 05 2024 08:03 IST
Image Source: Google

ஐசிசி நடத்தும் 9ஆவது ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள நெதர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. டல்லாஸில் நடைபெற இருந்த இப்போட்டியின் டாஸானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நேபாள் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய நேபாள் அணிக்கு குஷால் புர்டெல் மற்றும் ஆசிஃப் சேக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆசிஃப் சேக் 4 ரன்களுக்கும், குஷால் புர்டெல் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய அனில் ஷாவும் 11 ரன்களோடு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரோஹித் பௌடல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய குஷால் மல்லா, தீபேந்திர சிங் ஐரி, சோம்பால் காமி ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

ஆனாலும் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோஹித் பௌடல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் நேபாள் அணி 84 ரன்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த குல்ஷன் ஜா மற்றும் கரண் கேசி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய கரண் கேசி இரண்டு சிக்ஸர்களுடன் 17 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். 

பின்னர் அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த குல்ஷன் ஜா 14 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே அபினஷ் பொஹாராவும் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் நேபாள் அணியானது 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெதர்லாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய டிம் பிரிங்கிள், லோகன் வான் பீக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பால் வான் மீகெரன், பாஸ் டி லீட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணியும் தடுமாறியது. 

அந்த அணியின் தொடக்க வீரர் மைக்கேல் லெவிட் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த மேக்ஸ் ஓடவுட் - விக்ரம்ஜித் சிங் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஒரு கட்டத்தில் விக்ரம்ஜித் சிங் 22 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய ஏங்கெல்பிரட் 14 ரன்களுக்கும், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 5 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் நெதர்லாந்து அணியானது 15.2 ஓவர்கள் முடிவில் 80 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

ஆனாலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மற்றொரு தொடக்க வீரர் மேக்ஸ் ஓடவுட் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 54 ரன்களையும், பாஸ் டி லீட் 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் நெதர்லாந்து அணியானது 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் நேபாள் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிம் பிரிங்கிள் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை