என்னுடைய பிறந்த நாளில் 5 விக்கெட்டுகளை எடுப்பேன் என்று நினைக்கவில்லை - குல்தீப் யாதவ்!

Updated: Fri, Dec 15 2023 22:07 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான தொடரை நிர்ணயிக்கும் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 100 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 35 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 25 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 13.5 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தும் அசத்தியது.இந்நிலையில் தம்மை விட சூரியகுமார் யாதவ் தான் சதமடித்து பிறந்த நாளில் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்ததாக தெரிவிக்கும் குல்தீப் 2018 தென் ஆபிரிக்க சுற்றுப்பயணத்திலேயே இங்குள்ள சூழ்நிலைகளை அறிந்து கொண்டது இப்போட்டியில் அசத்த உதவியதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “சூர்யா பாய் பேட்டிங் தான் உண்மையான பரிசு என்று நினைக்கிறேன். அவர் பேட்டிங் செய்த விதத்தை பார்த்தது நன்றாக இருந்தது. ஏனெனில் பிட்ச் பேட்டிங்க்கு சாதகமாக இல்லாமல் இருந்தது. மேலும் என்னுடைய பிறந்த நாளில் 5 விக்கெட்டுகளை எடுப்பேன் என்று நினைக்காததால் அது சிறந்த நாளாக அமைந்தது. 

இருப்பினும் அணி வெல்ல வேண்டும் என்று நான் விரும்பியதே முக்கியமாகும் உலகக் கோப்பை தோல்விக்கு பின் முதல் 7 முதல் 10 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் தூங்கி எழுந்ததுமே உலகக் கோப்பை ஃபைனலில் சந்தித்த தோல்வி தான் நினைவுக்கு வந்து சோகத்தை கொடுத்தது. ஆனால் நகர்ந்து செல்லக்கூடிய இந்த வாழ்க்கையில் நீங்களும் நகர்ந்தாக வேண்டும். 

2018 தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் எனக்கு விளையாடுவதற்கு சில வாய்ப்புகள் கிடைத்தது. எனவே இங்குள்ள சூழ்நிலைகள் எனக்கு நன்றாக தெரியும். கிரிக்கெட்டில் எப்போதுமே நீங்கள் விரும்பியது கிடைக்காது. எனவே ஒவ்வொரு போட்டியிலும் கிடைக்கும் பாடங்களை வைத்து நீங்கள் வருங்காலங்களில் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை