NZ vs IND, 3rd T20I: போட்டியிலிருந்து விலகிய வில்லியம்சன்; அணியை வழிநடத்தும் டிம் சௌதீ!

Updated: Mon, Nov 21 2022 11:07 IST
Image Source: Google

டி20 உலகக் கோப்பை முடிந்துள்ள நிலையில், அடுத்து இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.நியூசிலாந்துக்கு சென்று, அங்கு இளம் இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், ஒருநாள் தொடர்களில் பங்கேற்க உள்ளது.

இதில் முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்தான நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறவுள்ளது. 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய அணியில் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அதிகளவில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி நடைபெற இருந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக டாஸ் போடப்படாமலேயே ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று மவுண்ட் மாங்குனியில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் சூர்யகுமார் யாதவின் அபாரமான சதம் மற்றும் தீபக் ஹூடாவின் அட்டகாசமான பந்துவீச்சின் காரணமாக இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் ஆபார வெற்றியைப் பெற்று 1-0 என்றகணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நியூசிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் வெற்றிபெற்றால் தொடரை வென்று விடலாம் என்ற உத்வேகத்துடன் இந்திய அணியும், தொடரை இழக்காமல் சமன் செய்யும் நோக்குடன் நியூசிலாந்து அணியும் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு பேரதிர்ச்சியாக அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மருத்துவ காரணங்களுக்காக இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனை நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கோரி ஸ்டீட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்றாம் போட்டிகான நியூசிலாந்து அணியை டிம் சௌதீ வழிநடத்துவார் என்றும், கேன் வில்லியம்சன்னிற்கு மாற்று வீரராக மார்க் சாப்மேன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார் என்பதனையும் கோரி ஸ்டீட் உறுதிசெய்துள்ளார். முன்னதாக கடந்த போட்டியில் கேன் வில்லியம்சன் அரைசதமடித்து அணியின் வெற்றிகாக போராடினார். தற்போது அவரும் விளையாடாதது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை