CWC 2023 Warm-Up Game: மீண்டும் விளையாடிய மழை; டக்வொர்த் லூயிஸ் முறையில் நியூசி வெற்றி!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கு அணிகள் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன. அதன்படி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி வில் யங் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின் இணைந்த டெவான் கான்வே - கேன் வில்லியம்சன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடந்த டெவான் கான்வே 78 ரன்களிலும், கேன் வில்லியம்சன் 7 ரன்களுக்கும் என ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த டாம் லேதம் 52 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 43 ரன்களையும், மார்க் சாப்மேன் 20, ஜேம்ஸ் நீஷம் 16, டெரில் மிட்செல் 25 என ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி இங்கிடி மற்றும் மார்கோ ஜான்சென் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரீஸா ஹென்றிக்ஸ் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த குயின்டன் டி காக் - ரஸ்ஸி வேண்டர் டூசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் கடந்த நிலையில் வேண்டர் டூசென் 51 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரமும் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் அரைசதம் கடக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த
ஹென்ரிச் கிளாசென் 39 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அதனைத்தொடர்ந்து குயின்டன் டி காக் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 89 ரன்களையும், டேவிட் மில்லர 18 ரன்களையும் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 37 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.