NZW vs INDW: நியூசிலாந்து பந்துவீச்சாளர்களிடம் வீழ்ந்தது இந்தியா!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய மகளிர் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்திய மகளிர் தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில் இன்று நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. போட்டி தொடங்கும் முன் மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அமிலா கெர், சூஸி பேட்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக அமிலா கெர் 68 ரன்களையும், சூஸி பேட்ஸ் 41 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா, யஷ்திகா பாட்டியா, பூஜா வஸ்த்ரேகர், ஸ்மிருதி மந்தனா என நட்சத்திர வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் மிதாலி ராஜ் - ரிச்சா கோஷ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிலும் ரிச்சா கோஷ் 26 பந்துகளில் அரைசதம் கடந்து, மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் கடந்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.
பின்னர் 52 ரன்களில் ரிச்சா கோஷ் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மிதாலி ராஜும் 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகள் நியூசிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 17.5 ஓவர்களிலேயே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஹீலி ஜான்சன், அமிலா கெர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன் மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி, 4-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.