இதனை அடுத்த தலைமுறையும் செய்ய வேண்டும் - விராட் கோலி!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இது கோலியின் 100வது ஆட்டம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது டெஸ்ட் பயணத்தை தொடங்கிய விராட் கோலி, இன்று புதிய மைகல்லை எட்டியுள்ளார். இந்திய அணி ஒருசில வீரர்களே இதனை செய்துள்ளனர். இதனையடுத்து அவருக்காக பிசிசிஐ சார்பில் "கோல்டன் கேப்" உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இன்று காலை தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அனைவரின் முன்னிலையிலும் வழங்கி கவுரவித்தார்.
அதன் பின்னர் பேசிய ராகுல் டிராவிட், “இது விராட் கோலியின் திறமைக்கு தகுந்த ஒன்று தான். கோலியின் வாழ்கையில் அடுத்தடுத்து நிறைய நல்ல விஷயங்கள் நடைபெறுவதற்கு இதனை ஒரு தொடக்க புள்ளியாக எடுத்துக்கொள்ளலாம். இன்னும் 200வது டெஸ்ட் போட்டி என்ற மைல்கல்லையும் எட்ட வேண்டும்” என பாராட்டினார்.
இதனால் நெகிழ்ச்சியடைந்த கோலி, “இது என் வாழ்வின் முக்கிய தருணமாகும். எனது மனைவி மற்றும் சகோதரர் இங்கு இருக்கிறார். என்னை நினைத்து அனைவரும் பெருமை கொள்கின்றனர். இதற்கு பிசிசிஐ-க்கு தான் நன்றி கூற வேண்டும். தற்போதைய காலத்து கிரிக்கெட்டில், 3 வடிவ போட்டிகள் உள்ளன, ஐபிஎல் தொடர்கள் உள்ளன.
எனினும் இந்த சூழலில் நான் 100 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதனை தான் நான் அடுத்த தலைமுறை வீரர்களும் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
விராட் கோலி தற்போது வரை 168 இன்னிங்ஸ்களில் விளையாடி 7,962 ரன்களை குவித்துள்ளார். இதில் 27 சதங்களும், 7 இரட்டை சதங்களும் அடங்கும். கோலி அடித்த அதிகபட்ச ஸ்கோர் 254 ரன்கள் ஆகும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக சதமடிக்காமல் இருக்கும் கோலி இன்று அதனை மாற்றி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.