ஐபிஎல் தொடரில் மீண்டும் வருகிறது ஹோம் & அவே ஃபார்மட்!
கரோனா அச்சுறுத்தலால் இந்தியாவிற்கு வெளியேயும், இந்தியாவில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே கடந்த 2 சீசனில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், அடுத்த சீசனிலிருந்து மீண்டும் பழைய முறை திரும்புகிறது.
ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். அதில் ஒருமுறை தங்களது ஹோம் கிரவுண்டிலும், மற்றொரு முறை எதிரணியின் மைதானத்திலும் விளையாடும். எடுத்துக்காட்டாக சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸுடன் மோதும் 2 போட்டிகளில், ஒரு போட்டி சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்திலும், மற்றொரு போட்டி மும்பை வான்கடேவிலும் நடக்கும்.
2021 ஐபிஎல் சீசன் முழுவதுமாக ஐக்கிய அரபு அமீரகத்திலும், 2022 ஐபிஎல்லின் முதல் பாதி மும்பை, அகமதாபாத், டெல்லி, சென்னையிலும், 2ஆம் பாதி அமீரகத்திலும் நடத்தப்பட்டது. இந்நிலையில், அடுத்த சீசனை பழைய மாதிரி ஹோம் & அவே ஃபார்மட்டில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்துவருகின்றன. அடுத்த ஐபிஎல் சீசன் சற்று முன்னதாகவே தொடங்கப்படும் என தெரிகிறது.