ஜிம்பாப்வேவிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி - ட்விட்டரில் மோதும் இருநாட்டு தலைவர்கள்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் பாகிஸ்தானை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி கண்டது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 130/8 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 129/8 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.
மற்ற நாட்டு ரசிகர்கள் இதனை சகஜமான வெற்றியாக பார்த்தாலும், ஜிம்பாப்வே ரசிகர்கள் இதனை கவுரவமாக பார்த்து வருகின்றனர். இதற்கு காரணம் "மிஸ்டர் பீன்" தான் என்றால் நம்ப முடிகிறதா?. அதாவது கடந்த 2016ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிரபல "மிஸ்டர் பீன்" கதாப்பாத்திரத்தில் நடித்த ரோவன் அத்கின்சான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு சென்றதோ பாகிஸ்தானை சேர்ந்த போலி மிஸ்டர் பீன்.
நாடக நடிகரான ஆசிஃப் முகமது மிஸ்டர் பீனை போலவே இருப்பார். இவர் ஜிம்பாப்வேவுக்கு சென்று நிகழ்ச்சிக்கான பணத்தையும் பெற்றுச்சென்றார். அவரை நிஜமான மிஸ்டர் பீன் என நினைத்த ஜிம்பாப்வே மக்கள் மற்றும் அரசு உற்சாக வரவேற்பு கொடுத்தது. முக்கிய பிரபலங்களுக்கு தரப்படும் பாதுகாப்புகளும் அவருக்காக கொடுத்திருந்தது. இது எப்படி கிரிக்கெட் போட்டிக்குள் வந்தது என நினைக்கலாம்.
ஜிம்பாப்வேவை சேர்ந்த ரசிகர் ஒருவர், ஜிம்பாப்வே மக்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். போலியான பாகிஸ்தான் பீனை எங்களிடம் அனுப்பினீர்கள். இதற்கு இந்த போட்டியின் மூலம் பழிதீர்க்கவுள்ளோம் என ட்வீட் செய்தார். இதற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் "முடிந்தால் செய்து பாருங்கள்" என சவால் விடுக்க, பிரச்சினை வெடித்தது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் தலையிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஜிம்பாப்வேக்கு என்னவொரு வெற்றி! வீரர்களுக்கு வாழ்த்துகள். அடுத்த முறை உண்மையான மிஸ்டர் பீனை அனுப்புங்கள்.." என்று பதிவிட்டார்.
இதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் அளித்துள்ள பதிலில், "எங்களிடம் உண்மையான மிஸ்டர் பீன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் எங்களிடம் உண்மையான கிரிக்கெட் ஆர்வம் இருக்கிறது. திரும்பி மீண்டு வரும் கேளிகையான பழக்கம் பாகிஸ்தானியர்களிடம் உண்டு. வாழ்த்துக்கள், இன்று உங்கள் அணி நன்றாக விளையாடியது" என்று டுவிட்டரில் பதிவிட்டார்.