தோல்வி எங்களுக்கு நிறைய விசயங்களை கற்று கொடுக்கும் - நிக்கோலஸ் பூரன்!

Updated: Fri, Oct 21 2022 13:45 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் அயர்லாந்து அணியும், விண்டீஸ் அணியும் மோதின. சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான இந்த வாழ்வா சாவா போட்டியில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த விண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. விண்டீஸ் அணியில் அதிகபட்சமாக பிராண்டன் கிங் 62 ரன்களும், சார்லஸ் 24 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய அயர்லாந்து அணி, பந்துவீச்சை போல பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டது. அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பவுல் ஸ்டிர்லிங் மற்றும் பால்பிர்னி ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் குவித்தது. கேப்டன் ஆண்டி பால்பிர்னி 37 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

இதன்பின் ஜோடி சேர்ந்த டக்கர் – பவுல் ஸ்டிர்லிங் கூட்டணி விண்டீஸ் அணியின் பந்துவீச்சை சிதறடித்து அசால்டாக ரன் குவித்தது. பவுல் ஸ்டிர்லிங் 48 பந்துகளில் 66 ரன்களும், டக்கர் 35 பந்துகளில் 45 ரன்களும் எடுத்ததன் மூலம் 17.3 ஓவரிலேயே இலக்கை மிக இலகுவாக எட்டிய அயர்லாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.

அயர்லாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற விண்டீஸ் அணி இந்த முறை சூப்பர் 12 சுற்றுக்கு கூட தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது. அதே வேளையில் அயர்லாந்து அணி கெத்தாக சூப்பர் 12 சுற்றுக்குள் கால் பதித்தது.

இந்தநிலையில், விண்டீஸ் அணியின் இந்த தோல்வி குறித்து பேசிய அந்த அணியின் கேப்டனான நிக்கோலஸ் பூரண், பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய நிக்கோலஸ் பூரன்,“இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் கொடுக்கிறது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த போதிலும் எங்களால் 150+ கூட எடுக்க முடியாதது வேதனையான விசயம். இது போன்ற ஆடுகளங்களில் 145 ரன்களை கட்டுப்படுத்துவது பந்துவீச்சாளர்களால் முடியாத காரியம். அயர்லாந்து அணிக்கு எனது வாழ்த்துக்கள். 

அயர்லாந்து வீரர்கள் பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டனர். இந்த தொடர் முழுவதில் நாங்கள் பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை. இந்த தோல்வி எங்களுக்கு நிறைய விசயங்களை கற்று கொடுக்கும். எங்கள் ரசிகர்களையும் நாங்கள் ஏமாற்றிவிட்டோம், இது அதிக வேதனையை கொடுக்கிறது. நானும் இந்த தொடரில் எனது பங்களிப்பை சரியாக செய்யவில்லை” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை